ஜப்பானில் நிலநடுக்கம் – பல்லாயிரக்கணக்கான பறவைகள் திடீரென வானில் வட்டமிடுகின்றன
ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் 3.5 முதல் 7.6 ரிக்டர் அளவில் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜப்பான் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ உட்பட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் பதிவாகியுள்ளது.
ஹொன்சுக்கு அருகில் 13 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் இஷிகாவா, நிகாடா, டொயாமா, யமகட்டா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை விரைவாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், மக்கள் அலறியடித்துக்கொண்டு தெருக்களில் ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் அலையின் வேகம் அதிகமாக உள்ளதால், சாலைகள் கடல் நீரால் சூழப்பட்டுள்ளதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வானில் பறக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பறவைகளின் இந்த செயல் சுனாமி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என சிலர் அச்சத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.