சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் 8 பேர் பலி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஈரான் ஹமாஸை ஆதரித்து வருகிறது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹவுதி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
அதேபோன்று சிரியாவில் பஷீர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அரசு அவரது ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதே சமயம் சிரியா, ஏமன், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடியே ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஆயுதக் குழுக்களும் இஸ்ரேலை தாக்கி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (30) சிரியாவின் அலிபோ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 5 பேர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.